Thursday 15 February 2024

சொல் இலக்கணம் தொல்காப்பியர் நெறிப்படி

 

                சொல்லிலக்கணம் (தொல்காப்பியம்)

  தனிச் சொற்களென்பன தொடர்களின் வழிப்பட்டனவேயாம். இன்று எழுதப்படுவன மிகுதி என்றாலும்,  இவை யாவும் தொடக்க காலத்தில் வாய்மொழியாகப் பேசப்பட்டு வந்தனவேயாம். வாயால் பேசப்பட்டு நெடுங்காலம் கழிந்த பிறகே எழுத்துத் தோன்றிற்று. வாயால் பேசப்படுவன என்பன உரையாடல்களே. ஒருவரே தம் கருத்தை உரைப்பதாயினும் அதுவும் உரையாடலின் பாற்பட்டதேயாம். "உலகத்துப் பொருள் உணர்த்தும் சொல் எல்லாம் வினாவும் செப்புமாகிய இரண்டின் மேல் நிகழும்"என்பர். உரையாடல்களே வாக்கிய அமைப்பைத் தந்தன. வாக்கியங்கள். பல தொடர்களால் அமைவன. எனவே தமிழ்நூலுடையார், தொடர்களில் அதிகக் கருத்துச் செலுத்தி. வகைப்படுத்தி இலக்கணம் வகுத்தனர். இத் தொடர்கள் வேற்றுமைத்தொடர், வேற்றுமை அல்லாத வழித் தொடர் (அல்வழித் தொடர்) எனப் பகுக்கப்பட்டு, விளக்கப்பட்டுள்ள முறை தமிழ் இலக்கணத்தின் சிறப்பியல்பாகும்

         சொல்  இலக்கண மரபு

  மரம் என்ற சொல்லுக்கும், அப் பொருளாக எதிரே நிற்கும் ஒன்றற்கும் யாது தொடர்பு? ஏதோ ஒரு காரணம் பற்றிக் கூறப்பட்டு, வழிவழியாக உணரப்பட்டு வருதலால். மரம் என்ற ஒலி கேட்டதும் அஃதுணர்த்தும் பொருள் நம் மனக்கண்ணில் தோன்றுகிறது. எனவே மரபு என்பது மொழியின் உயிர் போன்றதாகும். அம்மரபை நமக்கு விளங்க எடுத்துரைப்பதே இலக்கணமாகும்

          சொல் என்றால் என்ன?

சொல் என்ற சொல்லுக்கு மொழி, பேச்சு, பழமொழி, உறுதிமொழி, புகழ், மந்திரம், சாபம், கட்டளை, புத்திமதி, பெயர்ச்சொல், வினைச்.சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்கள் தமிழ்மொழியில் உள்ள இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகைப்பட்ட சொற்கள். நாடக அரங்கில் பேசப்படும் உட்சொல், புறச்சொல்  என்பன. சத்தம், நாமகள், நெல்  என்பவற்றையும் குறிக்கும்.

    சொல்,பதம்,கிளவி, மொழி, வார்த்தை, வாக்கு, வாசகம் இவை யாவும் ஒரே பொருளையுடையன, கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினால் ஆகிய ஓசையைக் குறிப்பன . கடலொலி, சங்கொலி, இடியொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகள். ஆகவே அவற்றை சொல் எனச்சொல்லுதல் கூடாது. இவற்றை அரவம், ஓசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. எழுத்தினாலாவது சொல். தனி எழுத்தாயினும் எழுத்துக்கள் தொடர்ந்து நின்றாயினும் பிறிதொரு பொருள்தருமேல் அவை சொல் எனப்படும். உலகிலுள்ள இருதிணை சார்ந்த பொருள்களின் பெயர்களையும் செயல்களையும் தன்மைகளையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுவதற்கான ஓசை அல்லது குறியீடுகளே சொல் எனப்படும். அவை பெரிதும் காரணங் கருதியே அமைவன வாயினும் காரணம் அறியப்படாது மறைந்தனவும் குறிப்பால் அறியப் படுவனவும் எனப் பலதிறத்தனவாகும்.

சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது

ஓரெழுத்து  தனித்து நின்றோ பிற எழுத்துகளுடன் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் மட்டுமே அது சொல் எனப்படும். கடலொலி. இடிஒலி முதலியன பொருள் தழுவாத ஓசைகள். அவை அரவம், ஓசை, இசை என்று சொல்லப்படும்."சொல் லென்பது எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை" என்பர். இளம் பூரணர். இச் சொல் அல்லது இத் தொடர் இப் பொருளை உணர்த்துமென்பது, வழிவழியாகப் பயன்பட்டு வரும் மரபு பற்றி அறியப்படுவதேயாகும்

 ஒரே எழுத்தாக வரும் போதும் பொருள்தந்தால் அதுவும் சொல் எனப்படும்

சொல் என்பது எழுத்தினால் ஆக்கப்பெற்று இருதிணைப் பொருள்களையும் அறிவிக்கும் ஒசையென்றும், தன்னை உணர நின்ற வழி எழுத்தெனவும், பிறர் பொருளை உணர்த்திய வழி சொல்லெனவும் கூறப்படும் என்று உரையாசிரியர் கூறுவர். ஒருவர் பொருளை உணர்தற்கும், உணர்த்தற்கும் கருவியாய் நிற்பது சொல், தானே ஒரு பொருளைக் கருதி உணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லை. பொருளை உணர்த்துவான் ஒருவன், சொல்லின் துணைக்கொண்டு அன்றிப் பொருளை அறிவுறுத்தலின் ஆகாமையின், அவனது தொழிலைச் சொல்லாகிக் கருவிமேல் ஏற்றிச் சொல் உணர்த்தும் எனக் கருவிக் கருத்தாவாகத் தொல்காப்பியர் கூறுவார்

சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர் இருதிணை,  ஐம்பால், எழுவகை வழு,  எட்டுவேற்றுமை,  அறுவகைத் தொகை, மூன்றிடம்,  மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டுவகையான் ஆராய்ந்துணர்த்தினார் என்பர் இளம்பூரணர்

இரண்டு திணையாவன: உயர்திணையும், அஃறிணையும்

ஐந்து பாலாவன: ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்பன

எழுவகை வழுவாவன: திணைவழு, பால்வழு,இடவழு காலவழு, செப்புவழு, வினாவழு, மரபுவழு என்பன.

எட்டு வேற்றுமையாவன: பெயர், , ஒடு, கு, இன், அது, கண், விளி என்பன.

அறுவகை ஒட்டாவன: வேற்றுமைத் தொகை, உவமத் தொகை வினையின்றொகை, பண்பின்றொகை, உம்மைத் தொகை அன்மொழித்தொகை என்பன

மூன்று இடமாவன தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன.                                                                மூன்று காலமாவன: இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

இரண்டு இடமாவன: வழக்கிடம், செய்யுளிடம் என்பன

.இவ்வெட்டினோடு சொல் நான்குவகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும் என இவையுங்கூட்டி, எட்டிறந்த பலவகையான் ஆராய்ந்துணர்த்தினாரென்பர் நச்சினார்க்கினியர்

 

    சொல் தனிமொழி, தொடர்மொழி என இருவகைப் படும். அச்சொற்றான், தனிமொழியும் தொடர்மொழியும் என இருவகைப்படும் தனிமொழி பொருள் விளக்குமாறு, நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்  மொழிகள் யாங்கணுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக் கூறிய படைப்புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்து நிற்றலுண்டு. அதனால் தனிமொழியென்ற பிரிவும் கொள்ளப் படுவதாயிற்று.

தனிமொழி பொருண்மை மாத்திரம் உணர்த்தவல்லது கேட்டார்க்கொரு பயன்பட நிற்பதன்றாம். கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர்மொழிகளேயாம். ஆகவே, தொடர் மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவியாகிய தனிமொழி இலக்கணத்தினைப் பின்னுணர்த்தலே முறையாகும். இம் முறையினை உளத்துட்கொண்டு இவ்அதிகாரம் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழிகளின் இலக்கணத்தை முன்னுணர்த்தி அத்தொடர் மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச்சொல், வினைச்சொல் இடைச்சொல், உரிச்சொல் ஆகிய   மொழிகளின் இலக்கணங்களைப் பின்னர் உணர்த்துவார் தொல்காப்பியர்.

    தொடர்மொழி, இருமொழித் தொடரும் பன்மொழித் தொடரும் என இரு வகைப்படும். அவை தொடருங்காற் பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும் எண்ணுநிலை வகையானும் தொடரும்.(எ-டு) சாத்தன், உண்டான், மன், நனி என்பன தனி மொழி சாத்தன் வந்தான் - இது பயனிலைத் தொடர் யானைக்கோடு - இது தொகைநிலைத் தொடர் நிலம் நீர் -இஃது எண்ணுநிலைத் தொடர் இவை இருமொழித் தொடர்.

'அறம்வேண்டி அரசன் உலகம் புரக்கும்.' என்பது பன்மொழித் தொடர்.

சொற்கள்,  உயர்திணை பற்றியும்,  அஃறிணை பற்றியும் பேசும். உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆ இரு திணையின் இசைக்குமன சொல்லே

 மக்களை உயர்திணை எனக்கூறுவர். மக்கள் அல்லாத ஏனைய உயிர்களை அஃறிணை எனக்கூறுவர். ஆகிய இரு திணைகள் பற்றியம் சொற்கள் பொருள் உணர்த்தி அமையும்.

திணை என்ற கோட்பாடு, தமிழ்மொழிக்கு மட்டுமே உரியது உலகில் எந்த மொழியிலும் இந்தக் கோட்பாடு இல்லை. திணை என்பதை திண் + ஐ என்று பிரித்தல் வேண்டும். திண் என்பது உறுதியை ஒழுக்கத்தைக் குறிக்கிறது. திணை என்றால் ஒழுக்கத்தை உடையது என்பது பொருள், உலகில் ஆறறிவு உடைய மக்கள் மட்டுமே உயர்தினை என்று அழைக்கப்பெற்றனர். ஓரறிவு முதல் ஐயறிவு உடைய உயிரினங்கள் அனைத்தும் உயர்வு அல்லாத திணை, அல்திணை, அஃறிணை என்றாயிற்று. இவ்விரு திணைகளைப் பற்றியும் பேசுவது சொல் எழுத்துக்களால் ஆக்கப்பெற்றது சொல்.                       ஓரெழுத்து ஒருமொழியாகச் சொற்கள் அமையலாம்.

பொருள் குறித்து வாராத அசை நிலைகள் சொல்லாகாவா  என்றால் ஆவயின் ஆறும் முன்னிலை அசைசொல் என்றும்,'வியங்கோளசைச்சொல்   என்றும் ஆசிரியரே கூறி இருப்பதால்  அவையும், இட முதலாகிய பொருள் குறித்து வந்ததால் சொல் என்றே சொல்லவேண்டும். இக்கருத்தே பற்றியே ஆசிரியர் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்றார்.

              சொல்லதிகாரம்

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின், மேற்பாயிரத்துள் 'எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி 'என நிறுத்தமுறையானே எழுத்து உணர்த்திச் சொல் உணர்த்து கின்றார். ஆதலின்,  சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து அது, 'சொல்லை உணர்த்திய முறைமை' என விரியும்

      தொல்காப்பியத்தில் அதிகாரம், இயல்கள், இலக்கணக் கூறுகள் யாவும் ஒரு நெறி கருதி, வரிசைப்படுத்திக் கூறிச் செல்லப்படுகின்றன. இவ்வரிசை முறையையும் விளங்கிக் கொள்பவர்களே தொல்காப்பிய அடிப்படையையும் நோக்கத்தையும் முழுமையாக அறிய இயலும்.

தொல்காப்பிய இயல்தலைப்புக்களும் ஆழ்ந்து சிந்தித்தற் குரியன. இயல்தலைப்பு யாது. இயலினுள் கூறப்பட்டுள்ள செய்திகள் யாவை, அவை கூறப்பட்டுள்ள வரிசை முறை யாது. கூறப்பட்டுள்ள இடத்திற்கும் நூற்பாவுக்குமுள்ள தொடர்பு யாது. முன்னர்க் கூறப்பட்டுள்ளனவற்றிற்கும் பின்னர்க் கூறப்படுவனவற்றிற்கும் உள்ள இயைபு யாது என நன்கு ஆழ்ந்து மூலபாடத்தைப் பலகாற் கற்று ஓதி உணரவேண்டும் சொல்லிலக்கணம் உணர்த்தினமை காரணத்தாற் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து சொல் என்பது, எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுத்தும் ஓசை, அதிகாரம் என்பது முறைமை

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தையும் ஒன்பது இயல்களாகப் பகுத்துக் கொண்டு முதல் நான்கு இயல்களில் தொடர்மொழிகளின் இயல்புகளையும் அவற்றிலமையும் சொற்களதியல்பையும் விளக்கு கிறார். பின்னர் வரும் நான்கு இயல்களில் தனிச் சொற்களின் இலக்கணத்தைக் கூறி, எஞ்சியவற்றை இறுதியியலில் கூறி முடிக்கிறார்.

கிளவியாக்கத்துள் அல்வழித் தொடர் கூறப்படுகிறது. வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய மூன்று இயல் களிலும் வேற்றுமைத் தொடர் கூறப்படுகிறது. அடுத்துவரும் நான்கு இயல்களிலும் பெயர், வினை, இடை, உரிச் சொற்களின் இலக்கணம் தனித்தனியே விளக்கப்படுகின்றது. எச்சவியல் இறுதியாக எஞ்சியவற்றைக் கூறி முடிகிறது

முதல் நான்கு இயல்களில் முதல் இயலாம்

1.       கிளவியாக்கம்

தொல்காப்பியர் சிறந்த மொழியியல் அறிஞர். அதனால்தான் முதலில் கிளவியாக்கத்தை அமைக்கிறார். கிளவி என்பது சொல்லையும், எழுத்தையும் குறிக்கும். கிளவியாக்கத்தில் தொடரியல் பற்றிப் பேசுகிறார். அதோடு, தொடரியலில் சொற்களை எவ்வாறு கையாளுவது என்பதைப் பற்றியும் தெளிவாகப் பேசுகிறார்                                                                    

    "கிளவி' என்ற சொல்லால் எழுத்தையும் சொல்லையும் தொடரையும் தொல்காப்பியம் குறிக்கிறது. அகப் பாடல்களில் ஒருவரது கூற்றைக் 'கிளவி' எனக் குறிப்பிடுதலும் அறியத்தக்கது. சொற்கள். பொருள் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவி யாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று என்பர் இளம்பூரணர். வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று என்பர் சேனாவரையரும் நச்சினார்க் கினியரும். சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருள் மேலாகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவி யாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று என விளக்குவார் தெய்வச் சிலையார். இவை யாவும் பொருந்தியனவே. அனைத்தையும் ஒருங்குவைத்துப் பார்க்கும் பொழுதுதான் முழுமையான விளக்கம் கிடைக்கிறது

2. வேற்றுமையியல், 3. வேற்றுமை மயங்கியல், 4. விளிமரபு வேற்றுமைக்கு மூன்று இயல்கள் கூறுகிறார். தற்கால மொழியியலார் வேற்றுமைக்கு மிக முக்கியமான இடம் தருகின்றனர். வேற்றுமைகள் தொடரியலுக்கு அடிப்படையாக அமைகின்றன. சான்றாக அவனை, அவனுக்கு, அவனது, அவனிடம், இவ்வாறு சொற்களைச் சொன்னால், அந்தச் சொல் சொற்றொடரைக் குறிக்கிறது. அவனை என்று சொன்னால் அந்த வாக்கியம் என்ன? என்ற கேள்வி எழும் அதனால் வேற்றுமையுருபுகள் அனைத்தும் சொற்றொடர் அமைப்பு உடையன. அதனால்தான் பெயருக்குப் பின்பு வருகின்ற வேற்றுமையைப் பெயரியலுக்குப் பின்சொல்லாது, கிளவியாக்கமாகிய தொடரியல் இலக்கணம் கூறும் இயலுக்குப் பின் வைக்கின்றார். அதில் வேற்றுமை உருபுகளை முதலியலிலும், உருபுகளின் மயக்கங்களை அடுத்த இயலிலும் எட்டாம் வேற்றுமையாகிய விளிஉருபை அடுத்த இயலிலும் பேசுகிறார்.

5. பெயரியல்

முன்பு கூறியது போன்று, எல்லாச் சொற்களுக்கும் நம் மூதாதையர் பரம்பரையாகப் பொருளை உணர்த்தினர். அதனால் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்று பேசுவார் தொல்காப்பியர்.   சொற்களுக்குச் சொன்மை, பொருண்மை என இரண்டு பண்புகள் உள்ளன என்று அறிவுடையோர் கூறியதைத் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுவார்

6.வினையியல்

வினைச்சொற்கள் வாக்கிய அமைப்பிற்கு மிக அடிப்படையானது. அதோடு, வினைமுற்றுக்கள் வினையெச்சங்கள் ஆகின்றன. சான்றாக, அவன் வந்தான், உண்டான், பேசினான், சென்றான் என்ற நான்கு வாக்கியங்களை ஒரு வினைமுற்றாலும், மூன்று வினையெச்சங்களாலும் கூறிவிடலாம். அவன் வந்து உண்டு பேசிச் சென்றான்.

வினைச்சொற்கள் வகைகள் அனைத்தையும், காலம் மூன்று வகைப்படும் போன்ற செய்திகளையும் வினையியலில் தெளிவாகக் கூறுவார்.

7. இடையியல் தமக்கென தனித்தன்மை இல்லாத சொற்களாக அமைவன இடைச்சொற்கள் .ஒரு சொல் பலபொருள்களை உணர்த்தலாம். பல சொற்கள் ஒரு பொருளை உணர்த்தலாம். ஆனால், அச்சொற்களுக்கெனத் தனித்தன்மை இல்லை என்பது பெயர்ச்சொற்கள் வேற்றுமையுருபு ஏற்கும். வினைச்சொற்கள் கால இடைநிலையை ஏற்கும். இடைச்சொற்கள் இது போன்று வேற்றுமையுருபுகளையோ, கால இடை நிலைகளையோ ஏற்காது. அதனால்தான் அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை.

8.உரியியல்

உரியியல் என்பது சொல்லுக்குப் பொருள்களைக் கூறுவன. அடிச்சொற்களாக அமைவன. பெயருக்கும், வினைக்கும் இடைச்சொல்லுக்கும் அடிப்படையாக அமையும் சொற்கள் என்றும் கூறலாம். பிற்காலத்தில் அகராதிகள் தோன்றுவதற்கு இவ்வுரியியல் அடிப்படையாக அமைகிறது..

சொற்களுக்குப் பரம்பரை பரம்பரையாக வந்த பொருள் அமைப்புத் தெரியுமேயொழிய அந்தப் பொருளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? என்பது தெளிவாகத் தெரியாது என்றே தொல்காப்பியர் கூறுவார்.

9. எச்சவியல்

கிளவியாக்கத்திலும், வேற்றுமை பற்றிய இயல்களிலும் கூறாத தொடரியல் செய்திகளை எச்சவியல் கூறுகிறது. சொற்கள் பற்றிய ஏனைய இயல்களில் கூறப்பெறாச் செய்திகளும் எச்சவியலில் கூறப் பெறுகின்றன

சொல்லதிகார விளக்கம் பின்னர் உரைக்கப்படும்

பதிவு:                                                                           தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ..காளியப்பன்                                                                 தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,பேரூராதீனம் 9788552993

 

 

 

 

Wednesday 22 November 2023

திருமண நிகழ்வு ஏற்படக்காரணம்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல்.பொருள்.கற்பு1091)

                    திருமண நிகழ்வு ஏற்படக்காரணம் என்ன என்பதை எடுத்துரைக்கும் நூற்பா.

    ஊழ் வினையால் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டு காதல் கொண்டனர்.கண்ணால் பேசியவர்,கரம் கோத்தனர். களிப்பும் எய்தினர். இவ்வாறு தனிமையில் இனிமை கண்டஇருவரும், களவினை நீக்கி பலரும் அறியக் குடும்ப வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிலையே கற்பு எனப்பட்டது. இல்லற வாழ்க்கையையே கற்பு என்றனர்.அவ்வாறு தம் வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கிய காலத்தில்,ஒருசில தலைவர் இவளை நான் காதலிக்கவில்லை எனப் பொய் பேசியும் (பொய் என்பது செய்தலை மறைத்தல்), ஒருசிலர் பிறர் அறிய வாழ்க்கை வாழும் போதே அவளைக் கைவிட்டும் வந்தனர். (வழு என்பது செய்வதில் கடைசி வரை உறுதியாக நில்லாது இடையில் தவறிவிடுதல்) இவ்வாறு பொய்யும் வழுவும் தோன்றி ஏமாற்றுத்தனங்கள் நிகழ்ந்தன.வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கத்தான்தண்டனை என்பதாலும் மலருக்கு மலர்தாவும் வண்டாகச் சில ஆடவர் மாறியதாலும்.ஏமாற்றுத்தனங்கள் மலிந்தன.ஆனால் மலரோ காய்களைத் தாங்க வேண்டியதாயிற்று. தந்தை மகற்காற்றும் நன்றிகளும் இருந்ததாலும் களவொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தத் தொடங்குவோர் இனிப் பலர்  முன்னிலையில் பெற்றோர் உடன்பட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இதனையே தொல்காப்பியர் “கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வது” என்றார். இக்கட்டுப்பாட்டின் படியே பின் எல்லாத் தமிழர்களும் ஒழுகி வந்தனர். இதுவே திருமண நிகழ்வுகளுக்குக் காரணம் ஆயிற்று. இதில் ஐயர் என்பதை இக்காலத்தில் உள்ள பார்பார்களாகக் கொண்டதால்தான் இந்நூற்பா இடைச் செருகல் எனக்கொண்டனர் சிலர். ஐயன் என்றால் தன் தந்தையின் தந்தை எனக் கொங்குநாட்டில் குறிப்பர் ஐயா என்பதை மேன்மை பொருந்திய குலப்பெரியோர், ஆசிரியர்,வயதில் மூத்தோர் என எடுத்துக்கொள்வதே மிகவும் சிறப்புடையதாகும் இவ்வாறு சமுதாயச் சான்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட வாழ்க்கையே கற்பு. இதனையே இயல்பினால் இல்வாழ்வான் என்றார் வள்ளுவரும். (1-9-19  பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 9788552993